காவிரி கரையோர கிராமங்களில் தீவன தட்டுப்பாடு : ஆலம்பாடி இன மாடுகள் அழிந்து போகும் அபாயம்


This is the news about a indigenous Alambadi Cattle which lives in Cauvery river bank in the verge of extinction due to fodder shortage.....


காவிரி கரையோர கிராமங்களில் தீவன தட்டுப்பாடு : ஆலம்பாடி இன மாடுகள் அழிந்து போகும் அபாயம்
2018-02-12@ 10:53:14

மேட்டூர்: காவிரி வறண்டு வருவதால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆலம்பாடி இன மாடுகள் முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் வழங்காததாலும், போதிய மழை பெய்யாததாலும் கடந்த ஆண்டு, காவிரி வறண்டு போனது. இதனால் பண்ணவாடி, கோட்டையூர், செட்டிப்பட்டி பரிசல் துறைகளில் காவிரியை மோட்டார் படகிலும், பரிசலிலும் கடந்து சென்ற நிலை மாறி இருசக்கர வாகனங்களிலும், டெம்போக்களிலும் மக்கள் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பரந்து விரிந்த காவிரி வறண்ட நிலையில் நடந்து சென்றும் கடந்தனர். மேட்டூர் அணை வரலாற்றில், காவிரியை வாகனத்தில் கடந்து சென்ற நிலை கடந்த ஆண்டு தான் ஏற்பட்டது. குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு செத்து மடிந்தன.

இதனை தாமதமாக உணர்ந்த அரசு, கால்நடைகளை காப்பாற்ற மலிவு விலையில் தீவனம் வழங்கியது. விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி இடம்பெயர்ந்தனர். இதனால், காவிரி கரையோரத்தில் பல கிராமங்கள் வெறிச்சோடின. கால்நடைகள் இறந்ததால் விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டது. நடப்பாண்டில், முன்னதாகவே காவிரி வறண்டு போய் காணப்படுகிறது. கரைகள் பாளம், பாளமாக வெடித்து உள்ளது. கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளும், விவசாய கிணறுகளும் படிப்படியாக வறண்டு வருகின்றன. காவிரி கரையோர கிராமங்களிலே இப்போதே குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், காவிரி கரையில் முகாமிட்டுள்ள விவசாயிகள், தீவன தட்டுப்பாடு ஏற்படும் முன்பாக கால்நடைகளை அடிமாட்டுக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி கரையில் உள்ள மாடுகள் ஆலம்பாடி இன மாடுகள் என கூறப்படும் நாட்டு மாடுகளாகும். கடந்த ஆண்டே ஏராளமான நாட்டு மாடுகள் அழிந்து போனது. இப்போது கால்நடை வளர்ப்போர் அடிமாட்டுக்கு இவற்றை விற்று விட்டால், ஆலம்பாடி இன மாடுகள் முற்றிலும் அழிந்து போகும். நாட்டு மாடுகளை அழிவின் பிடியிலிருந்து மீட்க தமிழக அரசும், கால்நடை பராமரிப்புத்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. கிராமப்புறங்களில் கடந்த ஆண்டு மலிவு விலை தீவனம் வழங்கியது போல, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் தாக்குதல் ஏற்படும் முன்பாக, கால்நடை பராமரிப்புத்துறை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். கால்நடைகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.dinakaran.com/News_detail.asp?Nid=375188

Comments

Popular posts from this blog

Mela serves as eye-opener on dwindling Kangayam cattle population